தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகர்மன்றத் தலைவர் பதவிகளுக்கு பழையபடியே நேரடித் தேர்தல் நடத்துவது என தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி ஏற்பட்டதிலிருந்தே, இத்தகைய நேரடித் தேர்தல் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான்.
கடந்த திமுக ஆட்சியின்போது, உள்ளாட்சிகளுக்குத் தேர்வு செய்யப்படும் கவுன்சிலர்களே அந்தந்த மாநகராட்சி மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர்களைத் தேர்வு செய்வார்கள் என்கின்ற நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. அனைத்து நகர்மன்றத் தலைவர் மற்றும் மேயர் பதவிகளை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது.
பொதுவாக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தலின் கூட்டணி பலம், உள்ளாட்சித் தேர்தலிலும் அப்படியே எதிரொலிக்கும் என்பது எதிர்பார்ப்பு. தேர்வு செய்யப்படும் கவுன்சிலர்கள் பலரும் ஆளும் கட்சி அல்லது கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். கவுன்சிலர்களைக் கொண்டு மேயர், நகர்மன்றத் தலைவரைத் தேர்வு செய்தால், ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இப்பதவிகளைப் பெற இடமேற்படும். அப்படியில்லாமல், இப்பதவிக்குத் தனியாகத் தேர்தல் நடத்தினால், எதிர்க்கட்சியினரும் மேயர், நகர்மன்றத் தலைவர்களாக வந்துவிடக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதனால்தான், இந்த நடவடிக்கையை முந்தைய அரசு மேற்கொண்டது.
முந்தைய திமுக அரசு எடுத்த அந்த முடிவு எடுத்த எடுப்பிலேயே கூட்டணிக் கட்சிக்குள் மிகப்பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தியது. அதிக கவுன்சிலர்களைக் கொண்ட திமுக, பல இடங்களில் நகர்மன்றத் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கவில்லை. வேண்டுமென்றே ஆளும்கட்சியின் கவுன்சிலரையே போட்டி வேட்பாளர்களாக நிற்கச் செய்தார்கள். இதில் தலைமையின் அறிவிப்புக்குப் பிறகும் போட்டியில் நின்றவர்கள் பலர். மேலும் யார் மேயர் அல்லது நகர்மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது என்பதற்காக, உள்ளூர் அமைச்சர், மாவட்டம், மாநகரச் செயலர்களின் ஆதரவு பெற சில லட்சங்கள் (சில இடங்களில் சில கோடிகள்) செலவு செய்தார்கள் இந்தத் தேர்வுசெய்யப்பட்ட கவுன்சிலர்கள் என்றுகூடப் பேசப்பட்டது. அந்த இடத்திலேயே ஊழலின் ஊற்றுக்கண் திறந்துகொண்டது.
இதைவிடக் கவலை தரும் நடவடிக்கை என்னவென்றால், ஒரு மாநகராட்சி, நகராட்சி முழுவதுக்கும் தான் பொறுப்பு என்கின்ற எண்ணம் ஒரு மேயருக்கோ, நகர்மன்றத் தலைவருக்கோ ஏற்படவில்லை. மாநகராட்சி மேயர் அல்லது நகர்மன்றத் தலைவர் ஏதோ ஒரு குறிப்பிட்ட வார்டுக்கு கவுன்சிலர் என்பதால், தனது பதவியைப் பயன்படுத்தி தனது வார்டுக்கு மட்டும் அதிக அக்கறையுடன் நன்மைகள் செய்வதும் மற்ற வார்டுகளை, அதன் கவுன்சிலர்கள் ஆளும்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் புறக்கணிப்பதுமான நிலை உருவானது.
இந்தச் சிக்கலுக்கு முடிவு காணும் வகையில், மாநகராட்சி மேயர், நகர்மன்றத் தலைவர் பதவிகளுக்கு நேரடியாகத் தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது தமிழக அரசு. துணை மேயர் பதவியை மட்டும் கவுன்சிலர்கள் மூலமாகத் தேர்வு செய்வது என்றும்
மேயர் அல்லது நகர்மன்றத் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிடுபவர் வார்டு கவுன்சிலர் பதவிக்கும் அதே நேரத்தில் போட்டியிட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து யாரும் எந்த ஆட்சேபணையும் சொல்ல மாட்டார்கள். ஆனால், மொத்த உறுப்பினர்களில் 5-ல் 4 பங்கு பேர் மேயர் அல்லது நகர்மன்றத் தலைவர் மீது நம்பிக்கையில்லா வாக்கு அளித்தால், அவரை அப்பதவியிலிருந்து நீக்கிவிடலாம் என்று ஒரு விதி இருப்பதாகத் தெரிகின்றது.
இந்த விதிமுறை, கவுன்சிலர்களால் ஒரு மேயர் அல்லது நகர்மன்றத் தலைவர் தேர்வு செய்யப்படும்போது மட்டுமே பொருந்தும். இந்த இரு பதவிகளுக்கும் நேரடியாக மக்களே தேர்வு செய்யும்போது அவர்களை நீக்குவது என்பது கவுன்சிலர்களின் உரிமையாக எப்படி இருக்க முடியும்?
மக்களால் தேர்வு செய்யப்பட்டவரை வார்டு கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு நீக்கிவிட முடியும் என்றால், கடந்தகால ஆட்சியில் எவ்வாறு மேயர், நகர்மன்றத் தலைவர்கள் மிரட்டப்பட்டார்களோ அதுபோலவே, இனிவரும் காலங்களிலும் மிரட்டத் தொடங்கிவிடுவார்கள். இதனால் பெருவாரியான கவுன்சிலர்களின் ஆதரவை நம்பியிருக்க வேண்டுமானால் அவர்கள் செய்யும் ஊழலைச் சகித்துக்கொண்டு, அடாவடித்தனங்களை ஏற்றுக்கொண்டு தலையாட்டி பொம்மையாக இருக்கும் நிலைமைதான் ஒரு மேயர் அல்லது நகர்மன்றத் தலைவருக்கு உருவாகும்.
ஒரு மாநகராட்சி அல்லது நகராட்சி மக்கள் அனைவராலும் தேர்வு செய்யப்பட்டவர் அனைத்து வார்டுகளுக்கும் பொறுப்பு என்கின்ற எண்ணத்துடன், வழங்கப்படும் அரசுப் பணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்கின்ற கண்காணிப்பையும் மேற்கொள்பவராகவும் இருக்க வேண்டும் என்றால், கவுன்சிலர்களுக்கு இந்த அதிகாரத்தை அரசு வழங்கக்கூடாது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மேயர் அல்லது நகர்மன்றத் தலைவர் தவறு செய்தால், அரசு ஆய்வு நடத்தி, ஆதாரத்துடன் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படும் மேயர் அல்லது நகர்மன்றத் தலைவரை, பெரும்பான்மை பலத்துடன் கவுன்சிலர்களே நீக்கும் அதிகாரம் மிரட்டலுக்கும் முறைகேட்டுக்கும் மட்டுமே வழிவகுக்கும். இதனை அரசு கவனத்தில் கொண்டு, விதிமுறைகளை வகுத்தால் நல்லது.
கடந்த பத்து ஆண்டுகளாகவே மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சித் தேர்தல்கள் முறையாக நடத்தப்படுவதில்லை என்கிற நிலைமைதான் காணப்படுகிறது. அதுமட்டுமல்ல, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வெற்றிபெற சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் செலவுசெய்வதைவிட அதிகமான அளவுக்குச் செலவு செய்யப்படுகிறது. பஞ்சாயத்துகளின் உறுப்பினராகவும் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு கௌரவப் பிரச்னையாகக் கருதப்பட்டு, லட்சங்கள்போய் கோடியில் செலவு செய்பவர்கள், அதாவது வாக்குகளை விலை கொடுத்து வாங்குபவர்கள் தோன்றிவிட்ட நிலைமை. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டால் மட்டுமே பொதுநல ஊழியர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட முன்வருவர். இல்லையென்றால், உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் நிதியும் ஊழலுக்கு இறைத்த நீராகத்தான் இருக்கும்!

No comments:
Post a Comment