Sunday, March 7, 2010

இஸ்லாம்-பிறர் பார்வையில்

நெல்லை கண்ணன்

February 8, 2009

nellai-kannan

உண்மைக்குப் புறம்பானோர் ஆட்சியிலே
…..உட்கார நேர்ந்திட்டால் விளைவதெல்லாம்
நன்மைக்குப் பதிலாக தீமை ஒன்றே
…..நபி பெருமான் சொல்கின்றார் மக்களுக்காய்
மண் முழுதும் குழப்பங்கள் செய்து நிற்பார்
…..மண் தரும் நல் வேளாண்மை அழித்து நிற்பார்
கண்ணியமே இல்லாத அவர்கள் தம்மை
…..கடவுள் என்றும் தண்டிப்பார் அருள மாட்டார்

படைப்பனைத்தும் இறைவனது அருள் உணர்வீர்
…..பார்க்கின்ற உயிர் அனைத்தும் அவனின் கொடை
இடைப்பட்ட காலத்து வாழ்க்கை தன்னில்
…..எல்லோர்க்கும் உதவி செய்வீர் நன்மை செய்வீர்
கடையனென்று எவனுமில்லை இறைவன் முன்னே
…..கருணையில்லார் மட்டுமே கடையராவார்
உடைமையென்று மென்மேலும் சேர்த்து சேர்த்து
…..உள்ளமின்றி வாழாதீர் வழங்கி நில்லும்

கொடுமையினைச் செய்வானைக் காப்பாற்றுங்கள்
….. கொடுமையினால் வீழ்ந்தானைக் காப்பாற்றுங்கள்
பட படத்தார் கேட்டார்கள் பெருமானிடம்
…..பாவியினைக் காப்பதுவா எவ்வாறென்று
கொடுமையினைச் செய்வானுக்கு அன்பு சொல்லி
…..கொடுமையினைச் செய்யாமல் திருத்திடுங்கள்
படுகிறவன் துயரத்தை உணர்த்தி அந்தப்
…..பாவத்தில் இருந்து அவனை விலக்கிடுங்கள்

நல்லவரைப் பதவியிலே அமர்த்தல் விட்டு
…..நாசவேலை செய்வோரை அமர்த்துகின்றார்
அல்லாவை அவரளித்த தூதர் தம்மை
…..ஆண்டவனுக்கு அஞ்சி வாழும் உண்மையோரை
பொல்லாத அச் செயலால் புறக்கணித்து
…..பொறுப்பின்றி அவர்கட்குத் துரோகம் செய்வார்
அல்லாவின் தீர்ப்பு நாளில் அவர்க்கு அல்லா
…..அளிப்பாரே நரகத்தை உண்மை உண்மை

கல்வி வழி ஞானத்தைப் பெற்றோரன்றி
…..கடவுளினைத் தீயவர்கள் அறிவதில்லை
நல்ல கல்வி இறைவனையே நம்பி நிற்கும்
…..நலமற்றோர் இறை இல்லை என்று நிற்பார்
வல்லவனாம் இறைவனையே வணங்கி நிற்போர்
…..வாழ்வாங்கு வாழ்ந்திருப்பார் இறையருளால்
அல்லாவை வணங்கி நிற்பீர் அருள் பெறுவீர்
…..அகிலமெல்லாம் அவன் கொடையே பணிந்து நிற்பீர்

எழுதியது நெல்லை கண்ணன்

நபி பெருமான் சொன்ன பதில்

இனத்தார் மேல் பற்றுக் கொள்ளல் தவறா என்று
…..இறைத்தூதர் நபி பெருமான் தன்னிடத்தில்
வினாவொன்று வைத்து நின்றார் நல்ல நண்பர்
…..விரைந்தங்கு நபி பெருமான் பதிலைச் சொன்னார்
இனத்தார் மேல் பற்று அவர்க்கு உதவி செய்தல்
…..எல்லாமே மிகச் சரிதான் ஆனால் மற்றோர்
இனத்தார் மேல் கொடுமை செய்ய உதவி நின்றல்
…..இனவெறி தான் நல்லதில்லை என்று சொன்னார்

எழுதியது நெல்லை கண்ணன்

(வேத வரிகளும் தூதர்மொழிகளும்)
வெளியீடு இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138,பெரம்பூர் நெடுஞ்சாலை சென்னை 12

சமரசத்தை நோக்கி ஒரு சமாதான பயணம் வாருங்கள் பயணிப்போம்