Sunday, February 28, 2010

இஸ்லாம்-பிறர் பார்வையில்

யுவான் ரிட்லி

January 9, 2010

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்…

“நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.

செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன்.
தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன். அதனால் அவர்கள் என்னை ஒரு ‘கெட்ட பெண்’ என்று அழைத்தார்கள். ஆனால் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையான போது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை – நானா? அல்லது அவர்களா?)

எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன்.

நான் படிக்கப்படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. குர்ஆனில் நான் மனைவிமார்களை எப்படி அடிப்பது என்றும், மகள்களை எப்படி அடக்கி ஒடுக்கி துன்புறுத்துவது என்றும் ஆண்களுக்கு உபதேசிக்கும் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன்.

எனது கைதுக்குப் பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து நான் இஸ்லாமை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன். எனது இந்த மாற்றம் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, ஏமாற்றம், உற்சாகம் போன்ற உணர்வுகளின் கலவையான நிலைமையை உண்டு பண்ணியது. இன்று! மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா விமர்சனம் செய்திருப்பது என்னை ஏமாற்றமும், அச்சமும் கொள்ள வைக்கிறது. இவருக்கு பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் இத்தாலியப் பிரதமர் ரெமானோ ப்ரோடி ஆகியோர் வேறு ஆதரவளிக்கின்றனர் என்பதுதான் வேடிக்கையான வேதனை.

புர்காவுக்கு வெளியேயும், உள்ளேயும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை உணர்ந்த ஒரு பெண் என்ற அடிப்படையில் சொல்கிறேன்: இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும், கட்டாயத் திருமணங்கள் பற்றியும் இவர்கள் சகட்டுமேனிக்கு எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த வன்கொடுமைகள் அத்தனைக்கும் இவர்கள் இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள். இவர்களது இந்த வெறித்தனமானப் போக்கு இவர்களது அறியாமையைத்தான் பறைசாற்றுகின்றது.

மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை. இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. திருக்குர்ஆனை கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை விளங்கும். மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.

இவ்வாறு இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி இருக்கும்போது, இந்த மேற்கத்திய ஆண்கள் ஏன் முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்? பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் ஆகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஆண்கள் கூட பாவாடை அணியும் ஸ்காட்லாந்து நாட்டு எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.

நான் இஸ்லாத்திற்கு மாறி முக்காடு அணியத் துவங்கியபோது மிகப்பெரிய அளவில் விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் எனது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன், அவ்வளவுதான். ஆனால் உடனே நான் இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன். ஏதோ கொஞ்சம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் இந்தளவிற்கு இனவெறியை நான் எதிர்பார்க்கவில்லை. ‘வாடகைக்கு’ என்ற வாசகத்தடன் என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண் இறங்கினாள். நான் அந்த டாக்ஸியில் ஏறுவதற்காக எத்தனித்தேன். ஆனால் என்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் என்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான். மற்றொரு டாக்ஸி டிரைவரோ என்னிடம் “பின் ஸீட்டில் வெடிகுண்டு எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே’ என்றும் “பின்லேடன் எங்கே ஒளிந்து இருக்கிறான் தெரியுமா?’ என்றும் கமெண்ட் அடித்தான்.

ஆம்! பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்பது ஒர் இஸ்லாமியக் கடமை. நான் அறிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் – அதாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் உடை அணிகின்றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் எனும் முகத்திரை அணிந்து வெளியில் வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் அணிகிறாள், அவளுக்கு அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன்! வால் ஸ்டிரீட்டில் இயங்குகின்ற ஒரு வங்கியின் அதிகாரி தன்னை ஒரு சீரியஸான பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் என்பதற்காகத்தானே கோட் சூட் அணிகிறார்! – அதுபோலத்தான் இதுவும்.

நான் ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணிய வாதியாகத்தான் இருந்தேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன்.. முஸ்லிம் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் என்று! அநாகரீகமான அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். ஆனால் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக 2003-ல் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிய பெண் ஒருத்தி நீச்சல் உடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை அந்தப் போட்டியின் நடுவர்கள் இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ஆரம்பம் இது என்று வர்ணித்தனர்.

ஹிஜாப் அணிவது சமூக உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக இருக்கிறது என்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். இந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை. இவர் சொல்வது சரியென்றால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போன், சாதா போன், பேக்ஸ், எஸ்.எம். எஸ். தகவல்கள் மற்றும் ரேடியோ ஆகியவை அர்த்தமற்றவையாகி விடும். இந்த உபகரணங்களை தொடர்பில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் உபயோகிக்கிறோம்?

இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். எனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாவிட்டாலும் எனக்கு கல்வி கற்க உரிமை உண்டு என்றும், கல்வியைத் தேடிப்பெற வேண்டியது எனது கடமை என்றும் இஸ்லாம் எனக்கு சொல்லித் தருகின்றது.. இஸ்லாத்தின் இந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் என்று கட்டளையிடப்படவே இல்லை.

இன்னும் சொல்லப் போனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல. இது மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் உலகளாவிய பிரச்சினையாகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்…. National Domestic Violence Survey நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 12 மாத கால அளவில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.

ஆண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி அடிக்க அனுமதிக்கிறது இஸ்லாம் என்ற கூற்றை எடுத்துக் கொண்டால் – இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி குர்ஆன் வசனங்களையும், நபிமொழி குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகின்றனர். ஆனால் அந்த வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் உள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் எற்படும் விளைவுதான் இது. ஒர் ஆண் தனது மனைவியை அடிக்கத்தான் வேண்டுமாயின், அவளது உடலில் எவ்விதக் காயமோ அடையாளமோ இல்லாமல்தான் அடிக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது. இது குர்ஆனுக்கே உரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும். இதன் உள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்… முட்டாளே! உனது மனைவியை அடிக்காதே!! என்பதுதான்.

இதற்கு மேலும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்: அமெரிக்காவின் ஆன்மீகக் குரு ரெவரண்ட் பேட் ராபெர்ட்ஸன் 1992-ல் கூறிய கருத்து இதோ: “பெண் விடுதலை என்பது சமூக சீர்கேட்டை உருவாக்கி, குடும்ப பாரம்பரியத்தை சீர்குலைத்து, கணவர்களை விட்டு ஒடுகின்ற, தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற, ஒரினச் சேர்க்கையில் பெண்களை ஈடுபடுத்துகின்ற ஓர் இயக்கமாகும்”. இப்போது சொல்லுங்கள்! யார் நாகரீகமானவர்கள்? யார் நாகரீகமற்றவர்கள்? என்று.”

(சகோதரி யுவான் ரிட்லி லண்டனில் இயங்கும் இஸ்லாம் சேனல் தொலைக் காட்சியின் அரசியல் எடிட்டர் மற்றும் ‘In the Hands of Taliban: Her Extra ordinary Story’ என்ற நூலின் இணையாசிரியர் ஆவார். இந்த நூலாசிரியரை hermosh@aol.com என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 2001-ம் வருடம் இவர் தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொள்ள வைத்த சுவையான சம்பவம் குறித்து இவரது நேரடி பேட்டி அப்போது ‘நியூஸ் வீக்’ பத்திரிக்கையில் பரபரப்பாக வெளியாகி இருந்தது)

நன்றி:http://vapuchi.wordpress.com/

இஸ்லாம்-பிறர் பார்வையில்

கல்கி அவதாரம்

October 7, 2009

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.

தமிழ் மொழி பெயர்ப்பு : சகோதரி ஸுஹைநா (சுமஜ்லா)

ஆங்கிலத்தில் படிக்க http://comparativestudy.blogspot/.comReadmore…

நன்றி:http://vapuchi.wordpress.com/

சமரசத்தை நோக்கி ஒரு சமாதான பயணம் வாருங்கள் பயணிப்போம்