MAY082010
வெள்ளி, 7 மே, 2010
“சாதிக்கொரு நீதி”
Filed under 2010 மே by அந்நஜாத்
“சாதிக்கொரு நீதி”
பெங்களூர்
M.S.கமாலுத்தீன்
பரிபோன உரிமைகளை பிச்சையாக பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ மன்றாடுவதன் மூலமோ நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல. Dr.அம்பேத்கர்
இந்தியா சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும் தீண்டாமை பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. தமிழகத்தில் 7,000 கிராமங்களில் இப்பிரச்சனை நீர்பூத்த நெருப்பாக உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் விழுப்புரம் மாவட்டம் காங்கியனூர் திரௌபதி அம்மன் கோயிலில் வழிபடவும் தீமிதி திருவிழாவில் கலந்து கொள்ள சென்ற தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கொதித்து போன அம்மக்கள் போராட்டம் நடத்த வழக்கம் போல் போலிஸ் தடியடி நடத்தியது. இப்பிரச்சனையை பெரிதாக்கி ஆதாயம் தேட அரசியல் கட்சிகள் வழக்கம் போல் முயல, அடி, உதை வாங்கிய அம்மக்களை அழைத்து பேச சொன்னது ஆளும் கட்சி. பேச்சுவார்த்தைக்குப் பின் டி.எஸ்.பி. தலைமையில் பாதுகாப்போடு வழிபட்டு வந்து விட்டார்கள். பிரச்சனை தற்காலிகமாக முடிந்தது.
ஆனால் இந்தியா முழுவதும் டீக்கடைகளில் இரட்டை குவளை முறை, செருப்பு போட முடியாமை, முடிவெட்டிக் கொள்ள முடியாமை, குடி தண்ணீர் எடுக்க முடியாமை, சைக்கிளில் போக முடியாமை, கோயிலுக்குள் நுழைய முடியாமை இவ்வளவு ஏன் செத்தால் கூட சுடுகாடு கொண்டு செல்ல முடியாமை என பல இயலாமைகள் இன்னும் இங்கே நிலவுகிறது. இவற்றை எல்லாம் ஒரே மையால் தீர்த்து விடலாம் என்று சொல்லித்தான் ஒவ்வொரு முறையும் ஓட்டு வாங்கி போனார்கள். எந்த பிச்சனையும் இது வரை தீர்ந்ததில்லை.
தீண்டாமை பிரச்சனை தீர்ந்து விடக் கூடாது என்பதில் எல்லா அரசியல்வாதிகளும் தீர்மானமாக உள்ளார்கள் என்பதை “”எவிடன்ஸ்” என்ற அமைப்பு தென் தமிழக மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், சிவ கங்கை, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஆய்வு செய்தது 2009 வருடம். அதில் 85 பஞ்சாயத்துகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 69 கோயில்களில் தலித்துகளுக்கு அனுமதியில்லை. 72 கோயில்களில் உள்ளே போகலாம். சன்னிதானம் செல்ல கண்டிப்பாக அனுமதி யில்லை. 52 கோயில்களில் தலித்துகளுக்கு பரிவட்டம் கட்டப்படுவதேயில்லை. 32 கோயில் தேர் திருவிழாவின்போது வடம் பிடித்து இழுக்க அனுமதியில்லை. 64 கோயில்களில் பால் குடம், தீச்சட்டி போன்ற சடங்கின்போது பாகுபாடு கடைபிடிக்கப்படுகிறது. இவை எல்லாம் ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் இல்லை. இது பற்றி கேட்டால் 1989ம் ஆண்டு இயற்றப்பட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயும் என்பார்கள். இருபது ஆண்டு கால மாகிவிட்டது இச்சட்டம் இயற்றி. இதுவரை எவரையும் தண்டித்ததாக தகவல் இல்லை. தமிழகத்தில் 1535 காவல் நிலையங்கள் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 3 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் இரண்டு சதவீதம் கூட வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை. அப்படியே செய்தாலும் 95 சதவீத வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
திருச்செந்தூரிலிருந்து திருத்தணிவரை கும்மிடிப் பூண்டியிலிருந்து கோயமுத்தூர் வரை சாதிக்கொரு நீதி உண்டு. இதை சட்டத்தால் சரி செய்துவிட முடியாது. சமத்துவ புரங்களில் குடி அமர்த்துவதன் மூலம் சாதித்து விட முடியாது. இட ஒதுக்கீடு மூலம் வாழ்வாதாரத்தை வேண்டுமானால் வசதியாக்கலாம். ஆனால் சாதி கொடுமை? தீர்வு தான் என்ன?
புரட்சிப் பாரதத்தில் புதிய தமிழகத்தை அமைத்து விட விடுதலை சிறுத்தைகள் விருப்பம் கொள்கிறது. நீலப் புலிகளும் இதைத் தான் நினைத்தார்கள். நிறைவேறாது என்பது நிச்சயமாகத் தெரியும். பிறகு ஏன் கட்சி நடத்த வேண்டும்? பிழைப்புக்குத்தான். தந்தை பெரியார் திராவிட கட்சிகளுக்கு சொந்தமாகிவிட்டார். நாடறிந்த நல்ல தலைவர் காமராஜர் நாடார் சங்கத் தலைவராகி விட்டார். முக்குலத்தோர் முத்துராமலிங்கத் தேவரை ஜாதியின் தூதுவராக்கி விட்டார்கள். இப்படி எல்லோரும் எவரையாவது முன்னிலைப் படுத்துவது போல் தலித் கட்சிகள் அம்பேத்கரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள். இன்றைய தலித் தலைவர்கள் எவருக்கும் தங்கள் சமுதாயம் சாதி கொடுமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் துளிகூட கிடையாது. இருந்திருந்தால்
மறுபரிசீலனை செய்திருப்பார்கள்.
1920 களிலிருந்தே தந்தை பெரியார் சொன்னார் “இன இழிவை நீக்கிக் கொள்ள இந்த நிமிடமே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று. ஏற்றுக் கொண்டவர்கள் எல்லாம் ஈடேற்றத்தை இரு கண்களாலே கண்டார்கள். இவர்கள் சார்ந்திருந்த சமுதாயம் இழிவுகளோடு அவமானப்பட்டு அடியும் உதையும் வாங்கி கொண்டு ஆலய நுழைவுக்கு போராட்டம் தேவை தானா? சிந்தியுங்கள்! தொப்புள் கொடி சொந்தங்களே! இனியும் இந்த இழிவு தொடராமல் இருக்க இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இவ்வுலகிலும் மறு உலகிலும் மகத்தான வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது.
ஆளும் கட்சியும், அரசியல் வாதிகளும் உங்கள் மீது காட்டும் அக்கறை ஓட்டு வாங்கும் உள்நோக்கம் கொண்டது. அள்ளித் தரும் இலவசங்கள் “இன இழிவோடு இருக்க தரும் லஞ்சம்” என்பதை புரிந்து கொள்ளுங்கள்! உங்களையும் எங்களையும் படைத்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சொல்கிறான்,
எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அவர்களை நிச்சயம் மாற்றுவதில்லை. அல்குர்ஆன் 13:11 இதுதான் உண்மை. உங்களுக்கு சமத்துவமும், சகோதரத்துவமும், சமநீதியும் கிடைக்க வேண்டுமானால் சாதிக் கொரு நீதி ஓழிய வேண்டுமானால் இஸ்லாத்தை ஏற்பதால் மட்டுமே விடிவு காலம் பிறக்கும். நீங்கள் ஆடுகள் அல்ல; சிங்கங்கள். சிவப்புக் கம்பள வரவேற்பு இஸ்லாத்தில் மட்டுமே உண்டு.
நன்றி:http://www.annajaath.com/
No comments:
Post a Comment