Thursday, April 22, 2010

ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மனைவியைத் தண்டித்தல்

Posted: 21 Apr 2010 08:56 PM PDT

-எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

பெண்கள் பாரிய குடும்ப வன்முறைகளைச் சந்தித்து வருகின்றனர். அறிவியலிலும், நாகரிகத்திலும்(?) முன்னேற்றம் கண்ட நாடுகளில் கூட பெண்கள் தமது கணவர்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். சில ஆய்வுகள் 80 வீதமான பெண்கள் தமது கணவர்களினால் பெரியளவோ, சிரியளவோ வன்முறைக்குள்ளப்படுவதாகக் கூறுகின்றது. குடிகாரக் கணவர்களினால் மட்டுமன்றிப் படித்தவர்கள், பண்பட்டவர்கள், உயர் அரச உத்தியோகத்தினரால் கூட மனைவியர் மாடுகளைப் போன்று தண்டிக்கப்படுகின்றனர். இது குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாட்டை இவ்வாக்கத்தினூடாகத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

மனைவிக்குச் சிறந்தவரே மனிதர்களில் சிறந்தவர்:

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
‘தன் மனைவிக்கு யார் நல்லவராக இருக்கின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர். நான் என் மனைவியருக்குச் சிறந்தவனாக நடந்துகொள்கின்றேன்’ என நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (இப்னுமாஜா, தாரமி, பைஹகீ)

எனவே, ஒருவர் நல்லவர் எனச் சாட்சி பகர வேண்டுமென்றால் அவர் அவரது மனைவியிடம் நல்லவர் என்ற பெயர் எடுத்திருக்க வேண்டும்.

‘அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும் (பொறுத்துக்கொள்ளுங்கள்.) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.’ (4:19)

மேற்படி வசனம் மனைவியருடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறு பணிக்கின்றது.

நபி(ஸல்) அவர்கள் கூடத் தமது இறுதி ஹஜ் உரையில்;

‘பெண்கள் விடயத்தில் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்!’ என உபதேசித்துள்ளார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

அலட்டிக்கொள்ளக் கூடாது:

பெண்களிடம் சில நாணல்-கோணல்கள் இருக்கும். அவற்றை அலட்டிக்கொள்ளக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பெண்கள் வளைந்த எலும்புகளால் படைக்கப்பட்டவர்கள். அவர்களை ஒரேயடியாக நிமிர்த்த முயன்றால் முறித்து விடுவீர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நிறைகண்டு நிம்மதி பெறுங்கள்!

மனைவியிடம் குறை தேடாமல் நிறைகண்டு நிம்மதி பெறவேண்டும்.

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
‘முஃமினான் ஆண் தனது முஃமினான மனைவியை விட்டும் பிரிந்து விடவேண்டாம்! அவளிடத்தில் ஒரு விடயத்தில் குறைகண்டால் அவளிடத்தில் காணப்படும் நல்ல விடயத்தை நினைத்துத் திருப்தி கொள்ளுங்கள்!’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (சுனனுல் குப்ரா)

தண்டிக்கும் அனுமதி:
நன்மை செய்பவர்களுக்கு நற்கூலியும், தவறு செய்பவர்களுக்குத் தண்டனையும் வழங்குவது அல்லாஹ்வின் வழிமுறையாகும். இந்த அடிப்படையில் மனைவியின் நற்பண்புகளைப் பாராட்டி, தீமைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவதற்கு முற்பட்டு, இறுதிக் கட்டமாக தண்டிக்க அனுமதி உள்ளது. இந்த அனுமதி அளவோடும், நிதானமாகவும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் மட்டும் பயன்படுத்துவதற்குரியதாகும் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

தண்டனை என்பது மருந்து போன்றதாகும். நோய் தீர்ந்த பின்னர் மருந்து தேவைப்படாது. எனவே உரிய பிரச்சினைக்கு மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும்.

அடுத்தது, ‘தண்டித்தல்’ என்பது திருத்துவதற்கான ஆரம்ப விதிமுறையல்ல. திருத்துவதற்கான இறுதி வழிமுறை என்பதும் கவனிக்கத்தக்கதாகும். மனைவி விடயத்தில் தவறான போக்கைக் காணும் போது பண்பாக எடுத்துச் சொல்ல வேண்டும். மாற்றம் இல்லையென்றால் படுக்கையை விட்டும் பிரிந்து உளவியல் ரீதியில் அவளிடம் மாற்றத்தைக் கொண்டுவர முயலவேண்டும். அறிவு ரீதியான முயற்சியும், உளவியல் ரீதியான வழிமுறையும் பயனளிக்காத போது இறுதிக்கட்டமாக உடல் ரீதியான அணுகுமுறையை இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இது குறித்துக் குர்ஆன் கூறும் போது;
பெண்களை நிர்வகிக்க ஆண்கள் தகுதியுடையோராவர். அவர்களில் சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், (ஆண்களாகிய) அவர்கள் தமது செல்வங்களிலிருந்து செலவழிப்பதாலும் ஆகும். எனவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் கட்டுப்பட்டு நடப்போராகவும், (கணவனில்லாது) மறைவாக இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வோராகவும் இருப்பர். எவர்கள் கணவருக்கு மாறுசெய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ, அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். (திருந்தா விட்டால்) படுக்கைகளில் அவர்களை வெறுத்து விடுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களுக்கு (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உயர்ந்தவனும், பெரியவனுமாக இருக்கின்றான். (4:34)

‘அவர்களுக்குக் காயம் வராத முறையில் கடுமை இல்லாத விதத்தில் மென்மையாக அடியுங்கள்!’ என நபி(ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

‘முறையற்ற தண்டித்தல்’ குடும்பத்தில் குழப்பத்தை அதிகரிக்கச் செய்யுமே தவிர குறைக்காது. மனைவியின் மனதில்கணவன் மீது வெறுப்பை விதைக்கும். இதனால் சில பெண்கள் கணவனைப் பழிவாங்க நினைத்துக் கொலை கூடச் செய்கின்றனர். சிலர் தன் மீது அன்பில்லாதவனைத் வஞ்சம் தீர்ப்பதற்காக கள்ளக் காதலர்களை நாடுகின்றனர். இதற்கும் துணியாத சில மனைவியர் எதற்கெடுத்தாலும் முரண்பட்டுக் கணவனின் நிம்மதியையும், கண்ணியத்தையும் குறைக்க முற்படுகின்றனர்.

மற்றும் சிலர் தற்கொலை செய்து தாம் பிரச்சினையிலிருந்து தப்பி விடுகின்ற அதேவேளை கணவனுக்குக் கேவலத்தையும், தண்டனையையும் கொடுக்க முற்படுகின்றனர்.

எனவே, பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கும் வழி பிரச்சினையைத் தீர்ப்பதாக அல்லது குறைப்பதாக இருக்க வேண்டுமே தவிர குழப்பத்தைக் கூட்டுவதாக இருக்கக் கூடாது.

ஷரீஆவின் வரையறைகள்:

அபூதுபாப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
பெண்கள் என்ன செய்தாலும் அவர்களைத் தண்டிக்கக் கூடாது என ஆரம்பத்தில் தடை விதித்திருந்தார்கள். அதனால் பெண்கள் ஆண்களை மிகைக்கும் வண்ணம் நடந்து கொண்டார்கள். அப்போது ஆண்கள் மனைவியருக்கு அடிக்கும்அனுமதியைக் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் அனுமதியளித்தார்கள். அன்று இரவே பல மனைவியர்கள் தமது கணவர்களினால் தாக்கப்பட்டார்கள். இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் முறையிடப்பட்ட போது அவ்வாறு தாக்கியவர்களைக் கண்டித்ததுடன் அவர்கள் (தாக்கியவர்கள்) நல்லவர்கள் அல்ல என்றும் கூறினார்கள். (அல்முஸ்தத்ரக்)

எனவே, மனைவியருக்கு அடிக்கும் அதிகாரம் என்பது விருப்பத்திற்குரிய ஒன்று அல்ல. ‘தவிர்த்தால் நல்லது; தவிர்க்க முடியாது’ என்ற அளவுக்குத் தலைக்கு மேல் வெள்ளம் என்ற நிலை ஏற்பட்டால், சில வரையறைகளுடன் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படி மனைவியைத் தண்டிப்பது என்றால் பின்வரும் நிபந்தனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்:

(1) முகத்தில் அறையக் கூடாது:

முகம் கண்ணியத்திற்குரிய உறுப்பு. அதன் மூலந்தான் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யப்படுகின்றது. ‘முகத்தில் அறைய வேண்டாம்!’ என நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். (அபூதாவூத்)

(2) பெண்மையின் தனிப்பட்ட உறுப்புக்களில் தாக்கக் கூடாது:

சில வக்கிரம் கொண்ட ஆண்கள் பெண்களின் மார்பகங்களில் சிகரட்டால் சுடுவது, பிறப்பு உறுப்பில் தாக்குவது போன்ற கொடூரங்களைச் செய்து வருகின்றனர். இஸ்லாம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கின்றது.

(3) கடுமையான அடியாக இருக்கக் கூடாது:

நாம் ஏற்கனவே குறிப்பிட்ட (4:34) வசனமும், ஸஹீஹ் முஸ்லிமின் ஹதீஸும் இதைத்தான் உணர்த்துகின்றன. இது குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) கூறும் போது, ‘பாதிப்பு ஏற்படுத்தாத அடியாக இருக்க வேண்டும்!’ எனக் குறிப்பிடுகின்றார்கள்.

இஸ்லாமியச் சட்டத்துறை அறிஞர்கள் இது பற்றிக் கூறும் போது, ‘அடி ஒரு உறுப்பை முறிப்பதாகவோ, அதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது!’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த வகையில் மனைவியின் கண்கள் சிவக்கும் அளவுக்கோ, உதடுகள் வெடிக்கும் விதத்திலோ, பல்லு உடையும் விதத்திலோ, தோல் வீங்கும் விதத்திலோ அடிப்பவர்கள் தெளிவாக இஸ்லாத்திற்கு முரண்படுகின்றனர். இவர்கள் தமது மனைவியைத் திருத்த முன்னர் தம்மைத் திருத்திக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.

(4) பிறர் முன்னிலையில் தாக்கக் கூடாது:

மனைவி மீது பிறர் முன்னிலையில் வெறுப்பை வெளிப்படுத்துவதைக் கூட இஸ்லாம் விரும்பவில்லை. ‘வீட்டைத் தவிர வேறு இடத்தில் அவள் மீது வெறுப்பை வெளிப்படுத்தாதே!’ நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். சில ஆண்கள் மனைவியின் குடும்பத்தினர் முன்னிலையில் அவளைத் தாக்கி அதன் மூலம் முழுக் குடும்பத்தையும் அவமானத்துக்கும், அவஸ்தைக்கும் உள்ளாக்க விரும்புகின்றனர். இது தவறாகும்.

(5) தவறுக்குத் தக்கதாக இருக்க வேண்டும்:

தவறுக்காகத் தண்டிக்கும் போது அந்தத் தவறுக்குத் தக்கவாறே தண்டிக்க வேண்டும். சின்னக் குற்றம் செய்தவளுக்குப் பெரிய தண்டனையளித்தால் அது குற்றவாளியைத் திருத்தாது. அவளைக் குமுறச் செய்து மீண்டும் வெறியுடன் தவறு செய்யத் தூண்டும்.

(போர் செய்யத் தடுக்கப்பட்ட) புனித மாதத்திற்குப் புனித மாதமே நிகராகும். புனிதப்படுத்தப்பட்டவை (அவற்றின் புனிதம் மீறப்பட்டால் அவை)களுக்கும் பழிவாங்குதல் உண்டு! ஆகவே, எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறினால் அவர் உங்கள் மீது வரம்பு மீறியது போன்று நீங்களும் அவர் மீது வரம்பு மீறுங்கள்! மேலும், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்! (2:194)

நீங்கள் தண்டிப்பதாயின் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்கே தண்டியுங்கள். நீங்கள் பொறுமையுடனிருந்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே மிகச் சிறந்ததாகும். (16:126)

மேற்படி வசனம், எமது எதிரி எம்மைத் தாக்கினால் கூட அவனைப் பதிலுக்குத் தாக்கும் போது வரம்பு மீறி நடக்கக் கூடாது. அவன் தாக்கிய அளவே பதில் தாக்குதல் கொடுக்க வேண்டும் என எமக்குக் கட்டளை இடுகின்றது. எதிரி விடயத்திலேயே இவ்வளவு நேர்மையை இஸ்லாம் வலியுறுத்தும் போது எமது வாழ்க்கைத் துணைவியின் தவறுக்காகக் கண்-மண் தெரியாது கொடூரமாக நடந்துகொள்வதை இஸ்லாம் எப்படி அங்கீகரிக்கும்!?

மனைவியைத் தண்டிக்கும் கணவன் தனது நோக்கம் மனைவியை சீர்திருத்துவது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பழிதீர்ப்பதோ, வஞ்சம் தீர்ப்பதோ தனது இலக்கு அல்ல என்பதில் அவன் அவதானமாக இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாகத் தனது கோபத்தை அவள் மீது கொட்டித் தீர்க்க முடியாது. சில கணவர்கள் தன்னை மறந்து மனைவியைத் தாக்குகின்றனர். அப்போது அவர்களது புலன்கள் அனைத்தும் மரணித்து விடுகின்றன.

அவன் அடிக்கின்றான்; தனது கை அவளது உடலில் எந்த இடத்தில் விழுகின்றது என்பது அவனுக்குத் தெரியாது. உதைகின்றான்; தனது கால் எங்கே படுகின்றது என்பது அவனால் புரிந்துகொள்ள முடிவதில்லை. திட்டுகின்றான்; தனது வாய் பேசியது என்ன என்பது அவனுக்குத் தெரியாது. அடிப்பதை நிறுத்துமாறு அவள் கெஞ்சுகின்றாள்; அந்த வார்த்தைகள் அவனது செவிகளில் விழுவதில்லை. அவள் பாதுகாப்புக் கோறுகிறாள்; இவன் பாதுகாப்பளிப்பதில்லை. அவள் அழுகிறாள்; கத்துகிறாள்; இவனது உள்ளம் இரங்குவதில்லை. சிலபோது அவளது ஆடைகள் களைந்து, கிழிந்து, உடல் இரத்தம் வழிந்தால் கூட இவனது கண்களுக்கு அவை புலப்படுவதில்லை.

இந்த நிலையில் இல்லறத்தைத் தொடர்பவன் தனது மனைவியைத் திருத்தி விட முடியாது. எதற்கும் ஒரு எதிர்வினை உண்டு. இது நல்ல எதிர்வினையை உண்டுபண்ணாது.

எனவேதான் மனைவியைத் தண்டிக்க அனுமதிக்கும் வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது; ‘அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால், அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள். அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கின்றான்’ (3:34) என்று முடிக்கின்றான். தான் தனது தவறுக்கு வருந்துவதாகவோ அல்லது தான் தனது தவறுக்குக் கட்டுப்படுவதாகவோ வார்த்தை மூலமோ, செயல் மூலமோ மனைவி உணர்த்தினால் அதன் பின் அவளுக்கு அடிப்பது தடையாகும்.

இது குறித்து இமாம் இப்னு கதீர் அவர்கள் கூறும் போது;
‘அல்லாஹ் அனுமதியளித்த விடயத்தில் மனைவி கணவனுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவளுக்கு அடிக்கவோ, அவளை வெறுக்கவோ கணவனுக்கு உரிமை இல்லை. அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கின்றான் என இந்த வசனத்தை அல்லாஹ் முடித்திருப்பது, காரணமின்றி பெண்கள் விடயத்தில் அத்துமீறும் ஆண்களை அச்சுறுத்துவதற்காகவும், ஆணாதிக்கச் சிந்தனையில் அவர்கள் மீது அத்துமீறும் காஃபிர்களை விட பெரியவனாக அல்லாஹ் இருக்கின்றான் என்பதை இறுதி வார்த்தை உணர்த்துகின்றது.

நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை:

இஸ்லாம் மனைவியரைத் தண்டிக்க அனுமதியளித்துள்ளது. இருப்பினும் அதைப் பயன்படுத்தாதிருப்பதே சிறந்தது என நாம் ஏற்கனவே குறிப்பிட்டோம். இதற்கான அழகான முன்மாதிரியை நாம் நபி(ஸல்) அவர்களின் குடும்ப வாழ்வில் காணலாம். ‘போர்க் களத்தைத் தவிர வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் நபி(ஸல்) அவர்கள் எவரையும் அடித்ததில்லை. நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியரையோ, தமது பணியாளையோ எப்போதும் அடித்ததில்லை’ (முஸ்லிம்) என்ற நபிமொழி நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியரை அடித்ததில்லை என்று கூறுவதால் நாமும் அந்த வழிமுறையைப் பின்பற்ற முனைய வேண்டும்.

தான் அடிக்காத அதேவேளை அடிப்பவர்களைக் கண்டித்துமுள்ளார்கள்.

‘உங்களில் ஒருவர் தனது மனைவியை அடிமையை அடிப்பது போன்று அடித்து விட்டுப் பின்னர் இரவில் அவளுடன் உடலுறவில் ஈடுபடுகின்றீர்களே!’ எனக் கூறி நபி(ஸல்) கண்டித்தார்கள். (புகாரி)

ஃபாதிமா பின்து கைஸ் என்ற பெண்மனி தன்னை இருவர் பெண் பேசுவதாகவும், அவர்களில் எவரை மணப்பது என்பது குறித்தும் நபி(ஸல்) அவர்களுடன் ஆலோசனை செய்த போது, ‘அபூஜஹ்ம் மனைவிக்கு அடிக்கக்கூடியவர்!’ என்று காரணம் கூறி மாற்று ஆலோசனை கூறினார்கள்.

‘உங்களில் மார்க்கமும், நல்ல பண்பும் உள்ளவர்கள் பெண் கேட்டு வந்தால் அவர்களுக்கு மணம் முடித்துக் கொடுங்கள்!’ (திர்மிதி) எனக் கூறிய நபி(ஸல்) அவர்கள் ‘பெண்களை அடிக்கும் இயல்பு உள்ளவர் பெண் கேட்ட போது மாற்று அபிப்பிராயம் கூறியுள்ளார்கள் என்றால் பெண்களை அடிப்பது வரவேற்கத்தக்க அம்சமோ, பண்போ அல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

காரணங்களைக் கண்டறிவோம்:
கணவன், மனைவியை அடிப்பது அனுமதிக்கப்பட்ட அதேவேளை தவிர்க்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். இது இல்லற வாழ்வின் இனிமையை ஒழித்து விடும். குடும்பத்தின் அமைதியைக் குலைத்து விடும். குழந்தைகளின் உள்ளங்களில் ரணத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும். பிள்ளைகள் தந்தையை வில்லனாகக் காண்பார்கள். எனவே இதைத் தவிர்க்க வேண்டும். இதைத் தவிர்ப்பதாக இருந்தால் இந்தப் பிரச்சினை உருவாகக் காரணமாக இருக்கும் குறைகளைக் களைய வேண்டும்.

மனைவி தரப்பில்:

மனைவி தரப்பில் உள்ள சில குறைகள் அவள் தாக்கப்படக் காரணமாக அமைந்து விடுகின்றன. எனவே, அவள் முதலில் தனது குறைகளை அறிந்து அவற்றைக் களைய முனைய வேண்டும்.

(1) கணவனுக்கு மாறு செய்தல், கட்டுப்பட மறுத்தல், கடமைகளைச் செய்யாதிருத்தல்:
இது மனைவி தரப்பில் ஏற்படும் தவறாகும். இந்தத் தவறை மனைவி களைய வேண்டும். கணவனுக்குக் கட்டுப்படுவதைப் பெண் அடிமைத்துவமாகப் பார்க்காமல் அல்லாஹ்வுக்காகச் செய்யும் இபாதத்தாக அவள் பார்க்க வேண்டும்.

தனது முன்னாள் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பியதனால் இரண்டாம் கணவருக்குக் கட்டுப்படாமல் அவர் ஆண்மை அற்றவர் எனப் பொய் அவதூறு கூறிய பெண்மணிக்கு ஒரு கணவர் அடித்தார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் முறையிடப்பட்ட போது அந்தப் பெண்ணைத் தண்டித்தவரை நபியவர்கள் கண்டிக்கவில்லை என்பதை புகாரியின் (5825) நீண்ட ஹதீஸ் கூறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

(2) கணவன் மீது சந்தேகங்கொள்ளல்:
கணவனுக்கு ஏனைய பெண்களுடன் தொடர்பிருப்பதாக எண்ணுதல் அல்லது கதைத்தல் அல்லது அது குறித்துக் கணவனுடன் தர்க்கித்தல் என்பவை கணவனுக்குக் கோபத்தை உண்டுபண்ணும் செயல்களாகும். அத்தோடு அது கணவனைத் தவறான பாதைக்கும் இட்டுச் செல்லும். கணவன் குறித்து பிறர் தவறாகப் பேசினாலும் ‘அவர் அப்படிச் செய்ய மாட்டார். அவர் என்னுடன் அன்பாக உள்ளார்!’ என்று மறுக்க வேண்டும். இவ்வாறு நடக்கும் போது ‘தன் மனைவிக்கு நாணயமாக நடக்க வேண்டும். அவள் என் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறாள்’ என்ற எண்ணம் கணவனுக்கு ஏற்படும். வெறுமனே சந்தேகத்தைக் கிளப்பினால் ‘நான் செய்வேன். உன்னால் தடுக்க முடிந்தால் தடு பார்க்கலாம்’ என்ற எண்ணம் ஏற்பட்டு கணவன் தவறக் கூடும். சிலபோது இந்தப் பிரச்சினையால் மன உளைச்சலுக்குள்ளாகும் கணவர்கள் விபச்சார விடுதிகளையும், மதுபானச் சாலைகளையும் நாடலாம். எனவே, கணவன் மீது சந்தேகத்தை வெளிப்படுத்தக் கூடாது. சிலபோது கணவனுடன் அந்நியப் பெண்கள் பேசும் போது கணவன் மீதுள்ள அபரிமிதமான அன்பினாலும், பெண்களிடம் இருக்கும் இயல்பான பொறாமையினாலும் சந்தேகம் வருவதுண்டு. அப்படி இருந்தால் கூட அதைக் கணவனிடம் அவனது ஆண்மைக்கோ, நாணயத்திற்கோ பங்கம் ஏற்படாவண்ணம் முறையாகப் பேசித் தீர்த்துக்கொள்ள முனைய வேண்டும்.

(3) இல்லறத்துக்கு இணங்காதிருத்தல்:
பெண்களுக்கு ரோசம் வரும் போது கணவனுக்கு இணங்கிப் போகாத போக்கைக் கடைபிடிக்கின்றனர். இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. கணவன் தாம்பத்திய உறவுக்கு அழைத்து மனைவி காரணமில்லாமல் மறுத்தால் விடியும் வரை அவளை மலக்குகள் சபிக்கின்றனர் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே மலக்குகளின் சாபத்தை அஞ்சி, பெண்கள் இந்தத் தவறைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு பெண்களால் பாதிக்கப்படுகின்றவர்கள் சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்கெல்லாம் மனைவியைத் தாக்கித் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்வதுடன் தவறான தொடர்புகளையும் வளர்த்துக்கொள்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்படும் சிலர் தன்னினச் சேர்க்கையாளர்களாக மாறுகின்றனர்.

(4) கணவனின் அனுமதி இன்றி வீட்டை விட்டும் வெளியேறுதல்:
மனைவி வீட்டை விட்டு வெளியேறுவதென்றால் கணவனின் அனுமதியைப் பெற வேண்டும். அருகில் உள்ள தனது தாய்-உறவினர் வீட்டுக்குச் செல்வதானால் கூட கணவனிடம் கூறாது செல்லக் கூடாது. குறிப்பாகக் கணவன் வீட்டுக்கு வரும் போது அவனுக்குத் தெரியாமல் உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவது குடும்ப வன்முறைகள் உருவாகக் காரணமாக அமைகின்றது.

(5) கணவன் இல்லாத போது கணவன் வெறுக்கக் கூடியவர்களுக்கு வீட்டில் இடமளித்தல்:
ஆண்களின் சுபாவங்களை ஆண்களே அதிகம் அறிவர். கணவன் சில ஆண்களைக் குறிப்பிட்டு, ‘அவனுடன் பேச வேண்டாம்! அவன் நான் இல்லாத போது வந்தால் உள்ளே எடுக்க வேண்டாம்!’ என்று கூறியிருந்தால், அதன்படி செயல்படுவது மனைவிக்குக் கடமையாகும். இதற்கு மாறுசெய்யும் போது மனைவி கணவனால் தண்டிக்கப்படும் நிலைக்காளாகின்றான்.

கணவன் தரப்பில் ஏற்படும் தவறுகள்:

பெண்கள் தாக்கப்படுவதற்குப் பெண்களது தவறான போக்குகள் காரணமாக அமைவது போன்றே சில கணவர்களது ஆளுமையற்ற போக்கும் காரணமாக அமைவதுண்டு. அவற்றில் சிலவற்றைப் பின்வருமாறு சுருக்கமாக நோக்குவோம்.

(1) ஆண்களின் அளவுக்கு மீறிய ரோச குணம்:
சில ஆண்கள் அதிக ரோசம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஷரீஆ சட்டப்படி மஹ்ரமில்லாத ஆண்களுடன் சகஜமாக உரையாடுவது, சாதாரண ஆடையுடன் அவர்கள் முன்னால் வருவது போன்றவற்றை அவர்கள் தடுக்கும் போது மனைவி அதற்கு உடன்பட வேண்டும். தனது கணவன் தன் மீது சந்தேகம் கொள்கிறான் என்ற தொணியில் பெண்கள் எதிர்த்துப் பேசும் போது சண்டையாக அது மாறுகின்றது. சிலபோது சில ஆண்கள் குடும்ப உறுப்பினர்கள், மஹ்ரமான ஆண்களுடன் உரையாடுவதைக் கூடத் தடுப்பதுண்டு. இது தவறாகும். இந்தத் தவறான போக்கிற்கு மனைவி உடன்படாத போது கண்டிக்கின்றான்.

(2) தாயையும், தாரத்தையும் மதிப்பிடும் மதிநுட்பம்:
மனைவியின் உரிமைகளையும், தாயிக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் ஒருமுகப்படுத்திச் செயல்படும் திறன் கணவனிடம் இல்லாமையும் மனைவி தண்டிக்கப்படக் காரணமாக அமைகின்றது. சில தாய்மார்கள் மருமகள் மீது கொண்ட பொறாமையினால் மூட்டி விடுபவர்களாக இருப்பார்கள். மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் விதவையாக வேண்டும் என நினைக்கும் தாய்மாரும் உள்ளனர். தான் பெற்றுக் கஷ்டப்பட்டு வளர்த்த மகனுக்கு இவள் முழுமையாக உரிமை கொள்கின்றாளே! என்ற எண்ணத்தால் சில தாய்மார் இவ்வாறு நடந்துகொள்வதுண்டு. சில ஆண்கள் தாயை முழுமையாக நம்பி மனைவியைத் தண்டிக்கின்றனர். சிலர் மனைவியின் வாக்கை வேத வாக்காக ஏற்று பெற்றோரை நோவினை செய்கின்றனர். இரண்டும் தவறானவைகளாகும். இந்தத் தவறான போக்கால் பெற்றோரை நோவினை செய்தல் அல்லது மனைவியின் உரிமையை மறுத்தல் என்ற இரண்டு ஹறாம்களில் ஏதேனும் ஒன்றில் அல்லது சிலபோது இரண்டு ஹறாம்களிலும் சில ஆண்கள் வீழ்ந்து விடுகின்றனர். தாயையும், மனைவியையும் சரியாக மதிப்பிடும் திறனற்ற போக்கு மனைவி கண்டிக்கப்படக் காரணமாக இருப்பதை இது உறுதி செய்கின்றது.

(3) தவறான பிள்ளைப் பாசம்:
ஆரம்ப காலங்களில் குழந்தைகள் தந்தைக்கே அதிகம் அஞ்சுவர். ஆனால் அண்மைக்கால நிகழ்வுகள் மாறி, குழந்தைகளுக்கு அதிகம் அடிப்பவர்களாகத் தாய்மார் மாறியுள்ளனர். குழந்தைகளுடன் அதிக நேரத்தைக் கழிப்பதனாலும், குழந்தைகளின் குறும்புத்தனங்கள் அதிகரித்து விட்டதனாலும் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். தந்தையர் குழந்தைகளிடம் குறைந்த நேரத்தைச் செலவிடுவதாலும், முற்காலத்தில் தமது தந்தையர் தம்மை தாறு-மாறாகத் தாக்கிய போது தாம் மனமுடைந்தது போன்று தனது பிள்ளைகள் மனமுடையக் கூடாது என எண்ணுவதாலும் தந்தையர் பிள்ளைகளைத் தண்டிப்பது குறைந்திருக்கலாம்.

எனினும், தாய் குழந்தைகளுக்கு அடிக்கும் போது குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு அடிக்கும் போது கணவன் கோபப்பட்டு மனைவியைத் தண்டிக்க முற்படுகின்றான். இது தவறாகும்.

இதன் மூலம் தனது தாய் தவறு செய்கிறாள் என்ற எண்ணமும், தாய்க்கு அறிவும் அன்பும் இல்லை என்ற உணர்வும் குழந்தைகள் மனதில் உண்டாகும். மனைவி தவறாகத் தண்டித்தால் கூட பிள்ளைகளின் முன்னால் அவளைக் கண்டிக்கவோ, அதை விமர்சிக்கவோ கூடாது.

பெண் மாதத் தீட்டுடன் இருக்கும் போது அதிக எரிச்சலடைகின்றாள். அந்த எரிச்சலோ அல்லது மன அழுத்தங்களோ கூட அவளது நடத்தைக்குக் காரணமாக இருக்கலாம். இதையும் ஆண் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து, குழந்தைகளை நெறிப்படுத்துவதில் மனைவிக்கிருக்கும் உரிமையையும், கடமையையும் இது மறுப்பதாக அமைந்து விடும். அத்துடன் கூட்டமாகக் குதூகலாமாக இருக்க வேண்டிய குடும்பம் தாயைத் தனிமையாகவும், பிள்ளைகள் தந்தையைத் தனி அணியாகவும் ஆக்கி விடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகளைத் தன்பால் ஈர்க்க ஒரு பெண் தவறான வழிமுறைகளைக் கைக்கொள்ளவும் தந்தை பற்றிய தப்பெண்ணத்தைத் குழந்தைகளில் சிலரிடமாவது ஏற்படுத்தவும் முனையலாம்.

(4) கணவனின் கேவலமான வார்த்தைகள்:
சில ஆண்கள் பெண்களைச் சீண்டுவதற்காகக் கேலி செய்கின்றனர். கேலி முற்றிச் சண்டையாக மாறுகின்றது. சிலரிடம் பெண்களைப் பற்றிய இழிவான எண்ணங்கள் உண்டு.

பெண் என்பவள் செருப்புப் போன்றவள்; தேவைக்கு அணிந்து விட்டு, தேவையற்ற போது கழற்றி விட வேண்டும் என்றெல்லாம் கூறுவர்.

சிலர் அவளது அழகு, ஆடை, உணவு பற்றியெல்லாம் கேலியாகப் பேசி அவளைச் சீண்டி விட்டு, அவள் ஏதும் பேசி விட்டால் அடிக்க முற்படுகின்றனர். இவை தவறான வழிமுறைகளாகும். இந்தத் தவறுகளைக் களைந்து, வாழ்க்கை வாழ்வதற்கே! என்று எண்ணி, இஸ்லாமிய விதிமுறைகளைப் பேணி இல்லறத்தை நல்லறமாகவும், இனிமையாகவும் மாற்றிக்கொள்ள கணவன்-மனைவி இருவரும் முனைய வேண்டும்.


நன்றி: www.islamkalvi.com

Thursday, April 8, 2010

விதர்பா பிரச்சினையைத் தீர்க்க இஸ்லாமிய வங்கியே தீர்வு- எம்.எஸ்.சுவாமிநாதன்

புதன்கிழமை, ஏப்ரல் 7, 2010, 14:09[I
சென்னை: விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை தொடர் கதையாகியுள்ளதைத் தீர்க்க இஸ்லாமிய வங்கி முறை சரியான தீர்வாக அமையும் என்று இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என புகழப்படும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

கருணா ரத்னா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், விதர்பா பகுதியில், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் அதிக வட்டிக்குப் பணம் வசூலிப்பதால் அங்குள்ள விவசாயிகள் பெரும் கடனாளியாக மாறியுள்ளனர். இதனால் கடன் தொல்லை தாங்க முடியாமல் அவர்கள் விரக்திக்குத் தள்ளப்பட்டு தற்கொலை முடிவை நாடுகின்றனர்.

நேற்று கூட 30 பேர் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வட்டியே இல்லாமல் கடன் கொடுக்கும் இஸ்லாமிய வங்கி முறையை அங்கு அமல்படுத்த வேண்டும். அதுதான் அங்குள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண உதவும்.

சிறு வயதில் எனது பெற்றோர் என்னிடம் இருந்த நகைகளை காந்திஜியிடம் வழங்குமாறு அறிவுறுத்தினர். இவ்வாறு தானமாக பெறப்பட்ட நகைகளை காந்திஜி ஏலத்தில் விட்டு அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு ஹரிஜன மக்களுக்கு உதவினார் காந்தி. எனது தந்தை ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் . நம்மிடம் உபரியாக உள்ளதை இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறுவார். அதனபடி என்னிடம் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் கை வளையத்தை காந்தியிடம் கொடுத்தேன் என்றார் சுவாமிநாதன்.

கருணா ரத்னா விருது என்பது சுற்றுச்சூழலியல் மற்றும் சைவம் மீதான அகிம்சை, அன்பு .ஆகியவற்றை சிறந்த முறையில் வெளிப்படுத்திப் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் விருதாகும். சென்னையைச் சேர்ந்த கருணா இன்டர்நேஷனல் அமைப்பு இந்த விருதுகளை வழங்குகிறது.

இந்த விருதினை இஸ்லாம் மற்றும் சைவம் குறித்த ஆய்வுக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற முசாபர் ஹூசேன், புளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்த சின்னி கிருஷ்ணா, சிபிஆர் பவுண்டேஷனைச் சேர்ந்த நந்திதா கிருஷ்ணா ஆகியோர் உள்ளிட்ட நான்கு பேர் பெற்றனர். அவர்களுக்கு விருதுடன் தலா ரூ. 1 லட்சம் பரிசும் அளிக்கப்பட்டது.

நன்றி: thatstamil.com


Sunday, April 4, 2010

பிரிந்து போகும் திருமண பந்தங்களுக்கு..

எழுதியவர்/பதிந்தவர்/உரை பிற ஆசிரியர்கள்

ஆண், பெண் உறவு என்பது உலகில் மனித சமுதாயம் நிலைத்திருக்க பிரதான காரணியாக அமைகிறது. இதனால்தான் அல்லாஹ் அனைத்தையும் ஜோடி ஜோடியாகப் படைத்தான் அத்தோடு ஆண்களை பெண்களுக்கு ஆடையாகவும் ஆக்கினோம் என்றும் கூறுகிறான். அதோடு யார்திருமணம் செய்கிறாரோ அவர் மார்க்கத்தில் அரைவாசியை பூர்த்தி செய்துவிட்டார் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் இவ்வாறான சிறப்புக்களையும் தார்பரியங்களையும் கொண்டதாகவே இந்த திருமண பந்தம் காணப்படுகிறது.

ஆனால் இன்று இந்நிலை மாறி குடும்ப உறவு என்பது கேளிக்கையாகிவிட்டது. சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் பிரிந்து செல்கிறார்கள் இதற்கான காரணம் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம் ஆனால் ஆண்கள் பெண்களை நிர்வகிப்பவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றையே பெண்களும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள் இவற்றை ஆண்கள் நிறைவேற்றும்போதுதிருமணபந்தம் மனக்கசப்பின்றி சிறப்பாக தொடர்ந்து செல்லும்.

1. தான் மனைவியை விரும்புவதாக ஒவ்வொரு நாளும் கூறல்:

ஒவ்வொரு மனைவியும் தான் கணவனால் நேசிக்கப்படுகிறேனா என்பதை அறிந்து கொள்ளவே விரும்புவாள் எனவே இதனை கணவன் புரிந்து கொண்டு அவளை விரும்புவதாகக் கூறி அவளது மனதை ஆறுதல் படுத்தவேண்டும்.

2. புரிந்து கொள்ளலும், மன்னித்தலும்:

தவறு செய்யாதவர்கள் எவரும் இல்லை மனிதன் தவறு செய்யக்கூடியவன் என்ற ரீதியில் அவள் விடுகின்ற பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தவே முற்பட வேண்டும் ஏனெனில் மன்னித்தல் என்ற அம்சம் இல்லாவிட்டால் எந்த உறவும் நிலைத்திருக்க முடியாது.

3. நல்ல முறையில் பேசுதல்:

காலம் செல்லச் செல்ல குறைந்து போகும் அம்சமான கணவனுக்கும் மனைவிக்கும் இடையான பேச்சு தொடர்பை குறைந்து விடக்கூடாது. மாறாக அவர்களோடு உங்களது பிள்ளைகள், காலநிலை, வீட்டு விவகாரம் செலவினங்கள் பற்றி பேசுங்கள். பேச்சு தொடர்பு குறைகின்ற போது மணவாழ்க்கை சிக்கலில் முடிவடையும்.

4. மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் நேரம் செலவழித்தல்:

நீங்கள் செலவழிக்கின்ற நேரத்திலே மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் செலவழிக்கின்ற நேரமே அதிகம் நன்மைபயக்கக் கூடியது.

5. இல்லை என்று கூறுவதைவிட அதிகமாக ஆம் என்று கூறுதல்:

வழமையாக நீங்கள் எதிராக நடத்தலானது (Negative) அவர்களை உங்களை விட்டும் தூரமாக்கி விடக்கூடும் இல்லை என்று சொல்வதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள் நீங்கள் ஆம் என்று சொல்வதானது எந்தளவிற்கு உறவை பலப்படுத்துகிறது என்பதை நீங்கள் அறியும் போது நீங்களே ஆச்சரியமடைவீர்கள்.

6. பேச்சுக்களை செவிமடுத்தல்:

நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன என்ற வகையில் அவர்களின் உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள இடமளிக்க வேண்டும் உங்கள் மனைவியர் அவர்கள் கூறுகின்றவற்றை நீங்கள் காதுகளால் கேட்க வேண்டுமென எதிர்பார்ப்பதில்லை மாறாக இதயத்தால் செவிமடுக்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பர்.

7. அன்பு:

அவர்களோடு அன்பாக நடந்துகொள்ள வேண்டும் சில மணமக்கள் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பதே சிறந்த திருமணஉறவுக்கான பிரதான வழிமுறை என்பதை அறியாதிருக்கிறார்கள்.

8. வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளல்:

கணவனும் மனைவியும் சண்டையிட்டு பிரிந்து செல்வதற்கான பிரதான காரணம் வீட்டு வேலைகளை யார் செய்வது என்ற பிரச்சினையாகும் பிள்ளைகளை பராமரிப்பது என்பது பெண்கள் மீது மட்டும் திணிக்கப்பட்ட சுமையல்ல. அவள் அதை எதிர்ப்பார்க்காவிடினும் நீங்கள் அறிந்து உதவ வேண்டும்.

9. ஒருநாள் விடுமுறை அளித்தல்:

ஒரு மாதத்தில் பலமுறைகள் விடுமுறை அளியுங்கள் அதாவது அந்நாளில் அவள் வீட்டுக்கு பிள்ளைகளுக்கு உங்களுக்கு என்ன நடக்கிறது என்ற எந்தக் கவலையும் இன்றி ஓய்வாக இருக்க அனுமதியுங்கள் இவ்வாறான ஒருநாளை பெறுவதானாது அவர்களுக்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாவும் அவசியமானதாக அமைகிறது.

10. உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் உங்களுக்காக நீங்கள் கவனம் செலுத்தல்:

பல ஆண்கள் தங்களின் ஆரோக்கிய வாழ்வில் கவனமற்றவர்களாக இருக்கிறார்கள் இது வாழ்விற்கு சிறந்ததல்ல. ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அது ஆரோக்கியமான உங்கள் குடும்ப வாழ்விற்கு அவசியமானதாகும்.

- உம்மு ஆனிஷா

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்


நன்றி: http://www.islamkalvi.com:

Thursday, April 1, 2010



நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக!

நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்!
புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.

உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?
அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா ? அவற்றின்படி செயலாற்றுகிறோமா?

இவற்றைப் பின்பற்றாது மனம்போன போக்கில் விரும்பியவாறு வாழ்ந்துவிட்டால் நாம் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியுமா? என நாம் நம் நெஞ்சைத் தொட்டு நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம். எத்தனை சதவிகிதம் நாம் பின்பற்றுகிறோம் எனத் தெரிந்துவிடும்.

இதோ இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!!
முதன் முதலில் நமக்குக் குழந்தை பிறந்ததும் மதபோதகர் ஒருவரை அழைத்து பொருள் புரிந்தோ புரியாமலோ அழகாகத் தெரியும் ஒருபெயரை தேர்வு செய்து பாத்திஹா, துஆ ஓதி பெயர் சூட்டி மகிழ்கிறோம்.

பின்னர் அரபி மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதுவதற்காக அனுப்பிவைக்கிறோம். எப்படி ஓதிவருகிறார்கள்? என்னென்ன மார்க்க அறிவுகளைப் பெற்று வருகிறார்கள்? என்பதை எந்தப் பெற்றோரும் கவனிப்பதே இல்லை. பிற்காலத்தில் கல்லூரியில் காலெடுத்து வைக்கும் நாட்களில் சரியாக ஓதத்தெரியாததால் மறந்துவிட்டது என பரிதவித்து ஓலமிடும் பலரை நாம் இன்று காணமுடிகிறது.

அது மட்டுமா?
பிள்ளைகளுக்கு ஊர்வலம் நடத்தி சுன்னத் வைபவம், புனித நீராட்டு விழா, திருமண வைபவங்கள் போன்றவற்றை சீதனப் பகட்டுகள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள், பாட்டுக்கச்சேரிகள் என ஊரே வியக்கும்படி நமது வீட்டு வைபவங்களை குருமார்களின் தலைமையில் ஃபாத்திஹா, துஆ போன்றவற்றை ஓதி கோலாகலமாக அரங்கேற்றி பெருமைப்படுகிறோம்.

நடை மவ்லிது, விடி மவ்லிது
நல்லவை நிகழவும், பயணம் போகவும் நாடியது நடக்கவும் நடை மவ்லிது, விடி மவ்லிது ஓதி 'பரக்கத்தும் பொருளும்' குவிய விடிய விடிய சினிமா மெட்டுகளில் கச்சேரிகள் நடத்தி அமர்க்களப்படுத்துகிறோம்.

ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல்
இவை போதாது என இறைவனின் விசேச அருளைப்பெற ராத்திபு, குத்பிய்யத்து, தரீக்காக்களின் பல்வேறு செய்குகள் அரங்கேற்றிய திக்ருகள், ஹல்காக்கள், ஞானிகள் இயற்றிய ஞானப்பாடல்கள், 4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்,

மாயமந்திரங்கள்
பேய் பிசாசுகளை ஓட்ட தாவீசுகள், முடிச்சுக் கயிறுகள், மாய மந்திரங்களை தட்டைப் பீங்கானில் இஸ்முகள் என்ற பெயரில் எழுதிக் கரைத்துக் குடிப்பது, அரபி எழுத்துகளில் அழகாக வடித்து வீட்டுச்சுவர்களில் மாட்டுவது, நோய் நொடிகள் தீர பெண்களுக்கு தனியாக ஓதிப் பர்ப்பது போன்ற ஆயிரமாயிரம் போலிச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றிவரும் அவலக்காட்சிகளையும் காணுகிறோம்.

இவையெல்லாம் போலிச்சாமியார்கள், சாயிபாப்பாக்கள், வேடதாரிகள் நடத்தும் கபடநாடகங்கள்! ஏமாற்று வித்தைகள்!! கம்பியெண்ணவைக்கும் ஈனச் செயல்கள்!!

போலிகளிடம் ஏமாறாதீர்!
இவர்கள் வழியில் ஷெய்குகள்.மகான்கள் என்ற போர்வையில் இறையருள் பெற்ற மனிதப்புனிதர்கள் என்ற மாயையை எற்படுத்தி மக்களை ஏமாற்றும் எத்தர்களை இனம் கண்டு கொள்ள வேண்டாமா? இவர்களிடம் மண்டியிட்டு ஏமாறும் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் என்னென்பது?

இவற்றையெல்லாம் அறிவார்ந்த நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
மரணச்சடங்குகளும் கர்மாதிகளும்

மரணச் சடங்குககளோ இந்துக்களை மிஞ்சுமளவுக்குச் சென்று விட்டது. மூன்றாவது நாள் ஃபாத்திஹா, பத்தாவது நாள் ஃபாத்திஹா, நாற்பதாவது நாள்-ஃபாத்திஹா என அரபி மத்ரஸாக்களில் படிக்கும் அப்பாவி மாணவர்களை வாடகைக்கு அமர்த்தி முழுக் குர்ஆனையும் ஓதுவது, இவற்றைக் கடன் பட்டாவது, சொத்துகளை விற்றாவது விருந்து வைபவங்களை கோலாகலமாக நிறைவேற்றி கர்மாதிகளை நடத்தி வருவதையும் பர்க்கிறோம்.

அகிலத்திற்கெல்லாம் வழி காட்டும் வான்மறை இதற்காகவா அருளப்பட்டது ?
முகவரியில்லா மகான்கள்

அடுத்து ஊர் பெயர் வரலாறே இல்லாத கப்ருகளுக்கு தெய்வீகப் பெயர்சூட்டி, அவ்லியாக்கள், ஷெய்குமர்ர்கள், நாதாக்கள் என அங்கீகாரமளித்து ஆண்டுதோறும் உற்சவங்கள், சந்தன உரூஸ்கள், கூடு கொடிகள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள் என ஊரே அமர்க்களப்படும்படி விழாக்கள் எடுப்பதையும் கண்டு வருகிறோம்.

பாட்டுக்கச்சேரியும் நடனமும்
கப்ருகளைச் சுற்றி கராமத்துகளை விளக்கும் பாட்டுக்கச்சேரிகள், கதா காலட்சேபங்கள், மக்களை மயக்கும் நடன நிகழ்ச்சிகள், கப்ரு ஆராதனைகள், நேர்ச்சை தபர்ருக்கள், விஷேச மந்திரங்கள், கந்தூரிக் காட்சிகள் என அனாச்சாரங்களை வகைப்படுத்திக் கொண்டே போகலாம். இவையெல்லாம் மார்க்கத்தின் பெயரால் அர்ச்சனை செய்யப்படுகின்ற கைங்கரியங்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை!

பக்கவாத்தியங்கள்
இதற்கு போலி மத குருமார்களும், ஷைகுமார்களும், முல்லாக்களும் வயிறு வளர்க்கும் சில சில்லரை உலமாக்களும் பக்கவாத்தியங்களாக விளங்குவது தான் வேடிக்கையாக உள்ளது.

பிறந்த நாள் விழாக்கள்
இந்துக்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் எல்லாப்பழக்க வழக்கங்களையும் தவறாது பின்பற்றி 'பிறந்த நாள் விழா, இறந்த நாள் விழா, ஆண்டு விழா' என பல்வேறு விழாக்களையும் விடாது நடத்திக்கொண்டு நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என வீர முழக்கமிடுகிறோம்.

இவை போதாதென்று நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, கௌதுல் அஃலம் நினைவு விழா, ரிஃபாயி ஆண்டகை விழா, நாகூர் நாயக விழா, காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி உரூஸ் விழா, மோத்தி பாவா ஆண்டு விழா, குணங்குடி மஸ்தான் விழா, பொட்டல் புதூர் மைதீன்(யானை) ஆண்டகை விழா, ஆத்தங்கரை செய்யிதலி அம்மா விழா, பீமாப்பள்ளி பீஅம்மா விழா, பீடி மஸ்தான் விழா, தக்கலை பீரப்பா விழா, மெய்நிலை கண்ட ஞானிகள் விழா என மிகவும் பக்தியோடு தேசிய விழாக்களாக கரக ஆட்டங்களுடன் யானை ஊர்வலம் சகிதமாக கொண்டாடப்பட்டு வரும் புதுமையான விழாக்களையும் நாடெங்கிலும் பரவலாகக் காண முடிகிறது.

ஞானமர்ர்க்கத்தின் பெயரால் தீட்சைகள்
நம்மை வழி நடத்தும் குருமார்களோ நமது பலவீனங்களையும், அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு சுவர்க்கத்திற்கு வழிகாட்டுகிறோம் எனக் கூறி ஆதாயம் தேடி வழிகெடுத்து வருகின்றனர். பால் கிதாபு என்றும், தாவீசு என்றும், இஸ்மு என்றும், தீட்சை யென்றும், பைஅத் என்றும், முரீது என்றும் கூறி ஞான மார்க்கத்தின் பெயரால் நம்மை அதல பாதாளத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

பித்அத்கள் (புதுமைகள்) பெயரால் சமுதாயத்தில் அரங்கேறிவிட்ட சீர்கேடுகளைப் பார்த்ததீர்களா?

விஞ்ஞானயுகத்தில் கற்காலம்
விஞ்ஞானத்தின் உச்சிக்குச் சென்று வியத்தகு விந்தைகள் புரியும் இந்த அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டு கற்கால மனிதர்களைப்போல் இயங்கும் நம் மக்களின் அறியாமையையும் பேதமையையும் என்னென்பது? இஸ்லாம் கூறும் அறிவியல் நுட்பங்களையும், அற்புதமான தத்துவங்களையும் தனிசிறந்த நாகரிகத்தையும் மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் அலட்சியப்படுத்தும் அவல நிலையை யாரிடம் சொல்வது?

இந்த போலிச் சம்பிரதாயங்களையும், சடங்குககளையும் புனித இஸ்லாம் அனுமதிக்கிறதா? இவற்றிற்கெல்லாம் சாவு மணியடிக்க வேண்டாமா? கண்மூடித்தனமான பழக்கங்களையெல்லாம் மண் மூடச்செய்ய வேண்டாமா? குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இவற்றுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என்றால் இல்லவே இல்லை. பின் எங்கிருந்து இவை இறக்குமதியாயின? யூதர்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் போன்ற மாற்றாரிடமிருந்து படிப்படியாக இறக்குமதியாகி தொற்றிக் கொண்ட சாத்திரங்கள்! ஒட்டிக்கொண்ட நோய்கள்!! பேயாட்டம் போடும் போலிச்சடங்குகள்!!!

இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?
1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்
2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு
3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்
4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு
5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி
6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்
7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு
8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.
9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்
10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்
11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை
12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்
13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை
14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்
15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.
16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்
17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்
18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி
19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து
20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.
21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு
22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்.
23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை
24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில் தாவீசு
25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.
26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.
27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.
28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம்.
29. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,
30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.
31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.
32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம்.
33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.

இவை மட்டுமா? இன்னும் எத்னை எத்தனையோ? சடங்குகள் !
இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன. நவூது பில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக! இப்போது சொல்லுங்கள்! நம்மிடம் இஸ்லாம் இருக்கிறதா? நாம் இஸ்லாத்தில் இருக்கிறோமா? நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா? போலிகளாக வாழ்கிறோமா?

முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?
இந்திய விடுதலைக்கு வித்திட்ட அல்லாமா இக்பால் கூறுகிறார்:-
'முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்!
செயல்களில் சம்பிதாயச் சடங்குகளில நாம் இந்துக்களாக வாழ்கிறோம்.
ஆடைகளில் கலாச்சாரங்களில் மேலை நாட்டு மோகத்தில் கிறித்தவர்களாக வாழ்கிறோம்! வாணிபத்தில் வியாபார முறைகளில் யூதர்களாக வாழ்கிறோம்! அவ்வாறாயின் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்? 'முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?'

'அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டே (அவனுக்கு) இணையும் கற்பிக்கிறார்கள்.' (அல்-குர்ஆன்12:106) என்ற மறை வசனமும்,

'யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச்சார்ந்தவர்களே!' (நூல் அபூ தாவூது) என்ற நபி மொழியும் இன்று மிகவும் சிந்திக்க வேண்டிய வைர வரிகள்!

இவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!

வாருங்கள்.இன்று நாம் சபதம் ஏற்போம் !
அறிவுக்கேற்ற மார்க்கமாம் இஸ்லாத்தை நோக்கி அகில உலகமும் மிக வேகமாக வரும் இந்த கணினியுகத்தில், முஸ்லிம்களாகிய நாம், இனியும் அறிவுக்கே பொருந்தாத மூட நம்பிக்கைகளை நம்பி,

சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து மோசம் போக மாட்டோம்! போலி மதவாதிகளால் ஏமாற மாட்டோம்!! என சபதம் ஏற்போமாக!

இஸ்லாத்தின் தூய கொள்கைகளை உயிருள்ளவரை உறுதியுடன் பின்பற்றி அறநெறி வழுவாது வாழ்வோம்.
என இன்று வீரசபதம் ஏற்போமாக!

'இஹ்தினஸ்ஸராத்தல் முஸ்தகீம்'

இறைவா! எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 1:06)

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَة ً وَفِي الآخِرَةِ حَسَنَة ً وَقِنَا عَذَابَ النَّار

'
ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந்நார்'
எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நல்கும் நல் வாழ்வை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 2:201)

source http://albaqavi.co

நன்றி:readislam.net


உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

சமரசத்தை நோக்கி ஒரு சமாதான பயணம் வாருங்கள் பயணிப்போம்