Wednesday, July 8, 2009


அநீதிகளும் அபகரித்தலும்
2440.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" இறைநம்பிக்கையாளர்கள் நரகத்திலிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போது உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில், அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகி விடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை, உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தை விட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள். என அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார்.
Volume:2 Book:46
2441.
ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ் அல்மாஸினீ(ரஹ்) அறிவித்தார். நான் இப்னு உமர்(ரலி) அவர்களுடன், அவர்களின் கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்தபோது ஒருவர் குறுக்கிட்டு, '(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?' என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி), 'அல்லாஹுதஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, 'நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?' என்று கேட்பான். அதற்கு, அவன் 'ஆம், என் இறைவா!' என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த இறைநம்பிக்கையாளர், 'நாம் இத்தோடு ஒழிந்தோம்' என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும்போது இறைவன், 'இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்' என்று கூறுவான். அப்போது அவனுடைய நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும். நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், 'இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகும்' என்று கூறுவார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்" என்று கூறினார்கள்.
Volume:2 Book:46
2442.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume:2 Book:46
2443.
உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளான நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Volume:2 Book:46
2444.
அனஸ்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்" என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்?' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், 'அவனுடைய கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)" என்று கூறினார்கள்.
Volume:2 Book:46
2445.
பராஉ வின் ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய்யும்படிக் கட்டளையிட்ட ஏழு செயல்கள்) இவை தாம்; 1. நோயாளிகளை நலம் விசாரிப்பது. 2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது. 3. தும்மியவருக்கு அவர், 'அல்ஹம்துலில்லாஹ்' ('அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' என்று) சொன்னால், 'யர்ஹமுக்கல்லாஹ்' (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று பிரார்த்திப்பது. 4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது. 5. அக்கிரமத்திற்குள்ளானவருக்கு உதவுவது. 6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது. 7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது.
Volume:2 Book:46
2446.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகிறது. (இப்படிக் கூறும்போது) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள். என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Volume:2 Book:46
2447.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume:2 Book:46
2448.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை" என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.
Volume:2 Book:46
2449.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume:2 Book:46
2450.
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். ஒரு பெண் தன் கணவன் தன்னிடம் நல்லமுறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, (தன்னைப்) புறக்கணித்து விடுவான் என்றோ அஞ்சினால் கணவன் மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ்பரம்விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை" என்கிற திருக்குர்ஆனின் (திருக்குர்ஆன் 04:128 ஆம்) வசனத்தைப் பற்றி ஆயிஷா(ரலி) கூறும்போது, 'ஒருவர் தன் மனைவியிடம் (தாம்பத்திய) உறவை நாடி அதிகமாக வந்து செல்லாமல் தன் மனைவியைப் பிரிந்து (எவனுடைய நாளில் வேறொரு மனைவியிடம் சென்று) விட வேண்டும் என்று விரும்புகிற நிலையில் அவரின் மனைவி 'என் (தாம்பத்திய உரிமைகள்) விஷயத்தில் (நான்விட்டுக் கொடுத்து) உம்மை மன்னித்து விடுகிறேன்' என்று கூறினார். அப்போதுதான் இந்த இறைவசனம் அருளப்பட்டது" என்று குறிப்பிட்டார்கள்.
Volume:2 Book:46
2451.
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்களின் வலப்பக்கம் ஒரு சிறுவரும் இடப் பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், '(இந்த பானத்தை) இவர்களிடம் (வயது முதிர்ந்தவர்களிடம்) கொடுக்க நீ எனக்கு அனுமதி தருவாயா?' என்று கேட்டார்கள். அந்தச் சிறுவர், 'மாட்டேன், இறைவன் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து (எனக்குக் கிடைக்கக் கூடிய) என் பங்கை எவருக்கும் நான்விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்று கூறினார். எனவே, இறைத்தூதர் அச்சிறுவரின் கரத்தில் அந்த பானத்தை வைத்தார்கள்.
Volume:2 Book:46
2452.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
Volume:2 Book:46
2453.
அபூ ஸலமா(ரலி) அறிவித்தார். எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்" என்று கூறினார்கள்.
Volume:2 Book:46
2454.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய் விடுவான். இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume:2 Book:46
2455.
ஜபலா இப்னு ஸூஹைம்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் இராக்வாசிகள் சிலருடன் மதீனாவில் இருந்தோம். எங்களைப் பஞ்சம் தீண்டியது. எனவே, இப்னு ஸுபைர்(ரலி) எங்களுக்குப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து வந்தார்கள். (அதை நாங்கள் கூடி அமர்ந்து உண்ணும்போது இப்னு உமர்(ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது, 'இறைத்தூதர் இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதைத் தடை செய்தார்கள்; உங்களில் (அப்படிச் சேர்த்து உண்ண விரும்பும்) அந்த மனிதர் தன் சகோதரிடம் அனுமதி பெற்றாலே தவிர" என்று கூறுவார்கள்.
Volume:2 Book:46
2456.
அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 'அபூ ஷுஐப்' என்றழைக்கப்பட்ட அன்சாரித் தோழர் ஒருவருக்கு இறைச்சிக் கடை வைத்திருந்த ஊழியர் ஒருவர் இருந்தார். அவரிடம் அபூ ஷுஐப்(ரலி), 'எனக்கு ஐந்து பேருக்கான உணவைத் தயார் செய். நான் ஐந்தாவதாக நபி(ஸல்) அவர்களை அழைக்கக்கூடும்" என்று கூறினார். அவர்கள் நபி(ஸல்) அவர்களின் திருமுகத்தில் பசியின் அடையாள(மாக வாட்ட)த்தைப் பார்த்திருந்தார்கள். எனவே, அவர்களை விருந்துக்கு அழைத்தார்கள். நபி(ஸல்) அவர்களுடனும் அவர்களுடன் வந்திருந்தவர்களுடனும் விருந்துக்கு அழைக்கப்படாத ஒருவர் சேர்ந்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் (அபூ ஷுஐப்(ரலி) அவர்களிடம்), 'இவர் எங்களைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். இவருக்கு (இந்த விருந்தில் கலந்து கொள்ள) நீங்கள் அனுமதியளிக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'ஆம் (அனுமதியளிக்கிறேன்)" என்று பதில் கூறினார்கள்.
Volume:2 Book:46
2457.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான். என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume:2 Book:46
2458.
உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, 'நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகிறார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம். மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கிறேனோ (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்)விட்டு விடட்டும்" என்று கூறினார்கள்.
Volume:2 Book:46
2459.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நான்கு குணங்கள் எவனிடத்தில் உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு குணம் அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதைவிட்டுவிடும்வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள். (அந்த நான்கு குணங்கள் இவைதாம்:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறு செய்வான்; ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் அவமதிப்பான். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Volume:2 Book:46
முந்திய பக்கம்
குர்ஆனில் தேடுங்கள்
அடுத்த பக்கம்
சமரசத்தை நோக்கி ஒரு சமாதான பயணம் வாருங்கள் பயணிப்போம்